‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு சாத்தியமில்லை - முதல்வர் ஸ்டாலின்
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு சாத்தியமில்லை எனவும், இது கூட்டாட்சி தத்துவத்திற்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு, மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைக்கு மாறான ஒரு முன்மொழிவாகும். இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது. இதனை ஒருபோதும் பாஜகவால் செயல்படுத்த முடியாது. பாஜகவின் வறட்டு கவுரவத்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அமைச்சர்வை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப இந்தியாவின் ஜனநாயகத்தை வளைக்க முடியாது. இதுபோன்ற திசை மாற்றும் விவகாரங்களில் தங்கள் சக்தியை மத்திய அரசு செலவிட வேண்டாம்; வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.