வயநாடு நிலச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழர் உயிரிழப்பு.... பாறை இடுக்கில் கிடைத்த உடல்..

 
கேரள நிலச்சரிவு

 வயநாடு நிலச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம்  கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. 

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட  3 பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. சூரல்மலை கிராமமே மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் தற்போது வரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள், கேரள மக்கள், குழந்தைகள் என 3069 பேர் மீட்கப்பட்டு 45 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

 தொடர்ந்து மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், தோண்ட தோண்ட மனித உடல்களாக கண்டெடுக்கப்பட்டு வருவதோறு.. ஆற்று வெள்ளத்தில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு உடல்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருகுலைந்து போயுள்ளன.  சில இடங்களில் கை, கால்கள், தலை என தனித்தனியே உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

கேரள வயநாடு நிலச்சரிவு

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒரு தமிழரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த காளிதாஸ் கல்யாண் குமார் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்த  நிலையில் மேலும் ஒரு தமிழர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலுரை சேர்ந்த ஷிஹாப் என்பவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். சூரல்மலை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மத ஆசிரியராக ஷிஹாப் பணியாற்றி வந்துள்ளார்.  நிலச்சரிவு வெள்ளப்பெருக்கில் பள்ளிவாசல் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டதில் ஷிஹாப் உயிரிழந்திருக்கிறார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட  ஷிஹாப் உடல் பாறை இடுக்கில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவில்  உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.  உயிரிழந்த மூவருமே நிலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.