கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு

 
supreme court

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசின் அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. மத்திய சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை  ஆகியவற்றிடமும் அனுமதி கோரியிருந்தது. இதனையடுத்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்தது. இதனிடையே கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கடலில் பேனா சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். 
   
இந்தநிலையில், சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடல் வளத்தை பாதுகாக்கவும் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவும் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.