மற்றொரு அதிர்ச்சி! சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் மேலும் ஒரு புகார்

தெலுங்கு மக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் தொடர்ந்து தெலுங்கு மக்களை அவதூறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தெலுங்கர் முன்னேற்ற கழகம் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கர் முன்னேற்றக் கழக நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் புகழ் பாலாஜி, “தெலுங்கு மக்களை மற்றும் தெலுங்கு மன்னர்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர்களை வந்தேறி என்று தொடர்ந்து பேசி வருகிறார். நாங்கள் பூர்வகுடிகள் தான். இதுகுறித்து இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய தெலுங்கர் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் பி.எம் பாரத், “நாம் தமிழர் மற்றும் போலி தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும் கும்பல் தமிழகத்தில் உள்ள எல்லா தாலுகாவிலும் மொழி சிறுபான்மையினர்களை கொச்சைப்படுத்தும் விதமாக, மிரட்டும் விதமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரும் தெலுங்கர்களை வந்தேறி என பேசி பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் மிக மோசமாக அச்சுறுத்தி வருகிறார்கள். நாங்கள் நாம் தமிழர் கட்சி எதிர்கொண்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். பிரச்சனை ஏற்படக்கூடாது என்ற வகையில் புகார் அளிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியினர் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.நாங்கள் எதிர்கொள்ள ஒர்த்தில்லாதவர் சீமான். நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆயுதம் ஏந்தி தெலுங்கர்களை விரட்டுவோம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார்கள். அதனால் அவர் மீது வழக்கு பதிய வேண்டும் என புகார் அளித்துள்ளோம்” என்றார்.