எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு!

 
1

கா்நாடக மாநிலம், ஹாசன் தொகுதி மஜத எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா, 500- க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 2,800 காணொலியாக பதிவு செய்துள்ளதாகவும் அவா் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில், ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி.) விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரேவண்ணா தாக்கல் செய்த மனு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு புலனாய்வு குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “ஆபாச வீடியோ வழக்கில் ரேவண்ணா முன் ஜாமீன் எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஜாமீன் பெறும் வகையில் ரேவண்ணா மீது வழக்குகள் பதியப்படவில்லை எனத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ரேவண்ணா தனது முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில் பாலியல் வழக்கில் சிக்கிய எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணை கடத்தியதாக எச்.டி.ரேவண்ணா மீது மைசூருவில் உள்ள கே.ஆர்.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவுடன் ஆபாச விடியோவில் காணப்பட்ட பெண்களில் இவரும் ஒருவர். பாதிக்கப்பட்டவரின் மகன் ஒருவர் தனது தாயார் கடத்தப்பட்டதாக மூன்று நாட்களுக்கு முன் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து ரேவண்ணா மற்றும் பாபன்னா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தன் மீது பதியப்பட்ட இரண்டாவது வழக்கில் முன்ஜாமீன் கோரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எச்.டி.ரேவண்ணா மனுத் தாக்கல் செய்துள்ளார்.