அந்தரிக்கி நமஸ்காரம் .. தெலுங்கில் பேசிய CM விஜய் !

 
1

ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவரது உண்டவல்லி இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அப்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் லோகேஷ் ஆகியோர் விஜய்க்கு மலர்க்கொத்து வழங்கி, 'மங்களகிரி' பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். இரு மாநில முதலமைச்சர்களின் இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.

இச்சந்திப்பின் போது, கோதாவரி - காவேரி நதிகள் இணைப்பு, நீர் திட்டங்கள் மற்றும் சென்னையின் குடிநீர் தேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தென்னக மாநிலங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, கோதாவரி நீரை காவிரிக்கு திருப்புவது குறித்து சந்திரபாபு நாயுடுவும் விஜயும் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

கோதாவரி நீரை கிருஷ்ணா நதிக்கும், அங்கிருந்து பொல்லாபள்ளி நீர்த்தேக்கத்திற்கும், அதன் வழியாக பனகசெர்லா மூலம் பெண்ணாறுக்கும், இறுதியாக கண்டலேறு நீர்த்தேக்கம் வழியாக காவிரிக்கும் கொண்டு செல்லும் திட்டத்தை ஆந்திர அரசு முன்மொழிந்துள்ளது.

இதற்கிடையில், சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த ஆண்டு தெலுங்கு கங்கா திட்டத்தில் இருந்து 4.08 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீரைத் திறந்து விடுமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தண்ணீரின் இருப்பைப் பொறுத்து அதனைப் பரிசீலிப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மேலும், மனிதநேய அடிப்படையில் சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய உதவத் தயாராக இருப்பதையும் ஆந்திர அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து, விஜயவாடா புன்னமி காட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'விஜயவாடா உற்சவ் 2.0' விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தமிழக முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்றனர். கிருஷ்ணா நதிக்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளை இரு முதலமைச்சர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நதிகள் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாகக் குறிப்பிட்டார். தனது உரையை தெலுங்கில் "அந்தரிக்கி நமஸ்காரம்" (அனைவருக்கும் வணக்கம்) எனக் கூறித் தொடங்கிய அவர், விஜயவாடா வந்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், தசரா நவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்பதை தனக்கு கிடைத்த பெருமையாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகப் பாராட்டினார்.

 

துர்கா தேவியின் அருளால் கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் விரைவில் நனவாகும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஐந்து நதிகளை இணைப்பதன் மூலம் 2047-க்குள் இந்தியா உலகின் முதன்மை நாடாக மாறும் என்றும் தெரிவித்தார்.