மீண்டும் ஒர் உயிரை பறித்த நீட்...நீட் தேர்வு அச்சத்தால் கோவை மாணவி தற்கொலை..!!
Jun 17, 2026, 17:39 IST1781698170405
கோவையை சேர்ந்தவர் செந்தில் பிரபு. இவர், சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளராக உள்ளார். இவரது மகள் அனு கீர்த்தனா(19), மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்தார்.
முதல்முறை நீட் தேர்வு எழுதி பி.டி.எஸ். படிக்க வாய்ப்பு பெற்ற நிலையில், மீண்டும் அனு கீர்த்தனா நீட் தேர்வு எழுதி இருந்தார். ஆனால் நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான புகாரால் அந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறு தேர்வு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நீட் மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக அனு கீர்த்தனா தயாராகி வந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தனது சித்தப்பாவிற்கு தன்னால் எதிர்பார்த்த அளவு தேர்வுக்கு தயாராக முடியவில்லை எனவும், அதனால் தொடர்ந்து மனஅழுத்தத்தில் இருப்பதாகவும் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி உள்ளார்.
அதைத் தொடர்ந்து வீட்டில் அவர் விபரீத முடிவுக்கு முயன்றார். அந்த வாட்ஸ்அப் தகவலைக் கண்ட அவரது சித்தப்பா, வீட்டில் இருந்தவர்களுக்கு தகவல் அளித்ததோடு விரைந்து வந்து அனு கீர்த்தனாவை மீட்டு கோவை கணபதி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தொடர் சிகிச்சையில் இருந்த மாணவி அனுகீர்த்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

