சித்ரா பெளர்ணமியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தி.மலையில் கிரிவலம்
திருவண்ணாமலையில் சித்தர்களும் பக்தர்களோடு இணைந்து கிரிவலம் வரும் சித்ரா பௌர்ணமியை ஒட்டி விடிய விடிய சங்கொலி முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். குறிப்பாக சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்தர்கள் பக்தர்களுடன் இணைந்து கிரிவலம் வருவதாகவும், இந்த தினத்தில் கிரிவலம் வந்தால் 12 மாதம் கிரிவலம் வந்ததற்குண்டான பலன் என்பதும் ஐதீகம். சித்திரை மாதம் வரக்கூடிய சித்ரா பௌர்ணமி தினத்தில் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வர். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று இரவு 9.57 மணிக்கு தொடங்கி நாளை மே 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை கிழமை இரவு 11.57 மணிக்கு நிறைவடைய உள்ளதாக அண்ணாமலையார் திருக்கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சித்ரா பௌர்ணமி இன்று தொடங்கியதை ஒட்டி ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னை சேலம் மதுரை திருச்சி கோவை போன்ற தமிழக முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை முதல் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை வழிபட்டு கிரிவலத்தை தொடங்கினர். கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் நமசிவாய மந்திரத்தை ஜெபித்த படியும் சங்கொலி எழுப்பிய படியும் விடிய விடிய கிரிவலப் பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் திருக்கோவில், இந்திரலிங்கம் அக்னி லிங்கம் எமலிங்கம் உள்ளிட்ட அஷ்டலிங்க திருக்கோவில்களையும் தரிசித்து இடுக்கு பிள்ளையார் கோவில் என அனைத்து திருக்கோவில்களையும் தரிசனம் செய்து கிரிவலம் வந்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் சிறப்பு 5669 பேருந்துகளும் இயக்கப்பட்டன. தென்னக ரயில்வே சார்பில் 32 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாநகரம் அண்ணாமலையார் திருக்கோவில் கிரிவலப் பாதை என பல்வேறு இடங்களில் இடங்களில் சுமார் 800 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருவதோடு மட்டுமின்றி 24 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வடக்கு மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 9 சாலைகளில் 16 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரம் ஆக ஆக கிரிவலப் பாதை முழுக்க மக்கள் வெள்ளத்தில் நிரம்பி திருவண்ணாமலை மாநகரமே காணப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பக்தர்களின் கார் வேன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்காக 90 இடங்களில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சித்ரா பௌர்ணமி ஒட்டி இன்றும் நாளையும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளே எந்த விதமான கனரக வாகனங்களும் வராதவாறு காவல்துறையினர் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளனர். அதேபோன்று 16 தற்காலிக பேருந்து நிலையங்களிலும் பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளைய தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து இரண்டாவது நாளாக கிரிவலம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

