ஜூன் 5ம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா - ஜல்லிக்கட்டு அமைப்பு ஏற்பாடு..

ஜல்லிக்கட்டு அமைப்பு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் பாராட்டு விழா நடத்த திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாபெரும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டதுடன், அவசர சட்டமும் இயற்றப்பட்டது. பின்னர் இந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்வு, ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு வாதம் திருப்தி அளிக்கும் விதமாக இருந்ததாகவும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எந்த தடையும் இல்லை என்றும், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்தது.
இதனையடுத்து, தமிழக அரசின் தொடர் சட்டப்போராட்டமே இந்த வெற்றிக்குக் காரணம் என ஜல்லிக்கட்டு அமைப்புகள் பாராட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு அமைப்பு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் ஜூன் 5-ம் தேதி பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டிற்கு தடை இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, தமிழக அரசின் சார்பில் சிறப்பாக வாதாடி திருப்பி பெற்று தந்ததாகக் கூறி முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளனர்.