தீபாவளி: ஆம்னி பேருந்தில் பயணிப்பவர்களின் கவனத்திற்கு!
தீபாவளியை ஒட்டி ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து வெளிவட்டச் சாலை வழியே இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேடில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும். இந்த தேதிகளில் நகரத்தின் உட் பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவு படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச்செல்லலாம். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிசசேரி வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம் போல் இயக்கப்படும்.
ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விபரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பயணிகள் ஆம்னி பேருந்து சம்மந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.