கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் உள்ளே நுழையாதபடி தடுப்பு

 
kOyambedu

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்திருந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பேருந்துகளை இயக்கவிடாமல் காவல்துறையும், சிஎம்டிஏ அதிகாரிகளும் தடுத்து வருகின்றனர். ஆம்னி பேருந்துகள் உள்ளே நுழையாதபடி தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு 7.30 மணிக்குப் பிறகு ஆம்னி பேருந்தில் முன்பதிவு செய்த பயணிகள் கிளம்பாக்கிற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுவருகிறது. ஆனால் தமிழக அரசின் உத்தரவை மீறி கோயம்பேட்டில் இருந்து புறப்பட ஆம்னிபேருந்துகள் ஆயத்தமாகி வருகின்றன.


பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க முடியாது, கோயம்பேட்டில் இருந்து மட்டுமே இயக்குவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் உறுதி அளித்துள்ளது. 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு உரிய வசதிகள் இல்லை எனவும், 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.