பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் பலமடங்கு கட்டண உயர்வு!

 
omni bus

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. 

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
10 ,11,12 , 13 ஆகிய தேதிகளில் வழக்கத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வழக்கமாக ரூ.1,050 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.3,899 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நெல்லைக்கு வழக்கமாக ரூ.799 வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.2,000க்கு மேல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ.640 வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.1,700 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.849 வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.2,470 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.