குடிசை வீடு தீப்பிடித்ததில் 80 வயது மூதாட்டி உடல் கருகி பலி

 
fire

கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டி தீயில் கருகி  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சிக்குட்பட்ட நரசம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் (85) - ராஜம்மாள் (80) தம்பதியர். இவர்களது மகன் அருகில் வசித்து வரும் நிலையில், முதியவர்கள் இருவரும் தனியாக குடிசையில் வசித்து வந்தனர். நேற்றிரவு மூதாட்டி ராஜம்மாள் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த நிலையில், முதியவர் கோவிந்தராஜ் வீட்டின் வெளியே தூங்கியுள்ளார். 

நள்ளிரவில் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் அலறியடித்து கூச்சலிட்டுள்ளார். மேலும் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியும் அலறி கூச்சலிட்ட நிலையில், வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் மூதாட்டி குடிசைக்குள் சிக்கி கொண்டார். இருவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து  தண்ணீரை பீய்ச்சு அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து குடிசைக்குள் சென்று பார்த்தபோது தீயில் கருகி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இந்த தீ அருகில் இருந்த வீட்டிற்கும் பரவிய நிலையில் அந்த வீட்டில் வசித்து வந்த உமாபதி (40) மனைவி கற்பகம் (38) மகள்கள் காயத்ரி (15), தமிழரசி (12)  ஆகியோர் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியேறினர். வீடுகள், வைக்கோல் போர் ஆகியவற்றை தொடர்ந்து மேலும் தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சு அடித்து கட்டுப்படுத்தினர். 

தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழந்த நிலையில் முதியவர், பக்கத்துக்கு வீட்டில் இருந்த நால்வர் என மொத்தம் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இரண்டு வீடுகள், அருகில் இருந்த வைக்கோல் போர் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது. வீடுகளில் இருந்த 10 சவரன் தங்க நகைகள், 2 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள்,  சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாயின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் தீ விபத்தில் குடிசையில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.