“சரிக்கு சமமா வேட்டியா கட்டுற..”- சாதியைக் கூறி முதியவரை வெட்ட முயற்சி

 
ச்

திருச்சியில் முதியவர் ஒருவரை இருவர் தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளை காட்டி மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்ற சுமார் 70 வயது முதியவர் ஒருவரை இருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து அரிவாளை காட்டியும் மிரட்டி உள்ளனர். நாங்கள் குறிப்பிட்ட சமூகத்தை (முத்துராஜா) சேர்ந்தவர்கள் எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் முதியவரை தாக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இதனிடையே அங்கிருந்த பொது மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அந்த நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். அந்த முதியவர் லால்குடியை சேர்ந்த தேவராஜன் என்பதும் அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் உபயதாரர் எனவும் கூறப்படுகிறது. கோவில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி கோவிலை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.ஆக்கிரமிப்புகள் அகற்ற தேவராஜன் தான் தூண்டியதாக கூறி அந்த நபர்கள் தேவராஜனை தாக்கி உள்ளதாக தெரிகிறது. 

பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் முதியவரை இருவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது லால்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவர் அளித்த புகாரில், சரிக்கு சமமாக வேட்டி கட்டியதால் அடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.