ஒரே நாளில் அடுத்தடுத்து பற்றி எரிந்த ஓலா இ-பைக்குகள்

 
ஒரே நாளில் அடுத்தடுத்து பற்றி எரிந்த ஓலா இ-பைக்குகள்

கரூரில் ஓடிக் கொண்டிருந்த ஓலா எலக்ட்ரிக்கல் இரு சக்கர வாகனம் தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த தினேஷ். இவர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலையைப் பார்த்து வருகிறார். இவர் பேட்டரியால் இயங்கக் கூடிய ஓலா எலக்ட்ரிக்கல் இரு சக்கர வாகனத்தை 6 மாதங்களுக்கு முன்பு வாங்கி அலுவலகம் சென்று வந்துள்ளார். இன்று வழக்கம் போல் வீட்டிலிருந்து புறப்பட்டு சேலம் பை - பாஸ் சாலையில் திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் பேட்டரி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து புகை வந்துள்ளது. 

இதனை பார்த்த தினேஷ் இரு சக்கர வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு இறங்கி விட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் ஓலா இரு சக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமானது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எரிந்த ஓலா இரு சக்கர வாகனத்தின் மதிப்பு 1,47,000 ரூபாய் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

இதேபோல் மதுரை தனக்கன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த  ஒலா இ.பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கனகராஜ் அலுவலக பணியை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான திருமங்கலம் செல்வதற்காக நாகமலை புதுக்கோட்டையில் இருந்து தனக்கன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர் ஓட்டி வந்த ஒலா இ.பைக்  வாகனத்திலிருந்து திடீரென புகை வெளியாகி உள்ளது. இதை பார்த்த கனகராஜ் தனது இரு சக்கர வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி உள்ளார் அப்போது மெதுவாக தீப்பிடிக்க துவங்கி மலமலவென தீப்பிடித்து இருசக்கர வாகனம் முழுவதும் ஏரிந்து நாசமானது. இருசக்கர வாகனம் தீ பிடிப்பதை அறிந்த கனகராஜ் வாகனத்தை விட்டு இறங்கி தள்ளி சென்றதால் அதிர்ஷ்டவசமாக கனகராஜுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.