அப்பாடா..! மக்களுக்கு வந்த நற்செய்தி..! தமிழகத்தில் ஜனவரி முதல் அரிசி விலை குறைகிறது..!
ஜனவரி மாதம் முதல் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளதாக அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர் கோபி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சன்ன ரக அரிசி மூட்டை ரூ.800 வரையிலும், மோட்டா ரக அரிசி மூட்டை ரூ.600 வரையிலும் உயர்ந்தது.
தமிழகத்தில் வெளிச்சந்தையில் சன்ன ரக அரிசி மூட்டைக்கு ரூ.800 வரையிலும், மோட்டா ரக அரிசி மூட்டைக்கு ரூ.600 வரையிலும் விலை அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர வருவாய் கொண்ட குடும்பங்களின் மாதாந்திர செலவுகள் வெகுவாக உயர்ந்துள்ளன.
கடந்த ஜூலை மாதம் ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ கொண்ட சன்ன ரக அரிசி மூட்டை, ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,750 ஆகவும், செப்டம்பர் மாதத்தில் ரூ.1,900 ஆகவும் உயர்ந்தது. அக்டோபர் மாதத்தில் மேலும் அதிகரித்து ரூ.2,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், 26 கிலோ கொண்ட மோட்டா ரக அரிசி மூட்டையின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் ரூ.1,200 ஆக இருந்த இதன் விலை, ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,400 ஆகவும், செப்டம்பரில் ரூ.1,600 ஆகவும் அதிகரித்தது. தற்போது ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரிசி விலை உயர்வுக்கான காரணம் குறித்து நெல் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர் கோபி கூறியதாவது:-
“அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் சுமார் 100 லாரிகளில் நெல் மூட்டைகள் வந்துகொண்டிருந்தன. ஆனால், போதிய விளைச்சல் இல்லாத காரணத்தால் நெல் வரத்து திடீரென பாதியாகக் குறைந்தது. இதன் காரணமாகவே அரிசி விலை உயர்ந்தது.
தற்போது நெல் வரத்து மீண்டும் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வருகிற ஜனவரி மாதம் முதல் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.
அரிசி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், கடைகளில் அரிசி விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

