அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து வந்திருக்க வேண்டாம்.. சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் - செந்தில் பாலாஜி..

 
senthil balaji

tnஐடி அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்திருக்க வேண்டியதில்லை; சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  அந்தவகையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீடு உள்பட பல இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இந்த ரெய்டு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “என் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறவில்லை என் சகோதரர் வீடு, அவருக்கு தெரிந்தவர்கள் வீடு, என் நண்பர் வீடு, அவருடைய நண்பர்கள் வீடு என ரெய்டு நடந்து வருகிறது. ரெய்டு நடத்திய அதிகாரிகள் மீது தாக்குதல் குறித்து ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துவிட்டார். வருமான வரித் துறை சோதனைகள் எனக்கும் திமுகவுக்கும் புதிதல்ல. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு ஐடி சோதனை நடந்தது. அப்போது கூட என் தந்தை வீட்டில் சோதனை நடத்தி , அங்கிருந்து எடுத்துச் செல்லும் ஆவணங்களை எடுத்துச் செல்லும் போது என் தந்தையிடம் கையெழுத்து பெற்றுக் கொள்ளுங்கள் என நான் ஒத்துழைப்பு அளித்தேன்.

tn

வருமான வரித்துறை சோதனையை நேர்மையாக எதிர்கொள்வேன்;விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்றதற்கு வருமான வரித்துறையே காரணம்;சோதனை நிறைவடைந்த பின் செய்தியாளர்களை சந்திப்பேன். என் வீட்டில் சோதனை நடந்தாலும் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். என் தம்பி வீட்டில் விரும்பத்தகாத செயல்கள் நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததுமே நான் கரூருக்கு போன் போட்டு அங்கிருந்து தொண்டர்களை அழைத்து அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறிவிட்டேன். என் தம்பி வீட்டுக்கு அதிகாரிகள் அதிகாலை சென்றனர். அப்போது தம்பி வீட்டில் இல்லை. வீட்டின் பெல் அடித்ததும் திறப்பதற்கு 5 நிமிடம் தாமதமானது. உடனே அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து செல்லும் காட்சிகளை நான் வீடியோவில் கண்டேன். முகம் கழுவி கொண்டு வருவதற்கு கூட அனுமதி அளிக்காவிட்டால் எப்படி, பெல் அடித்தவுடன் எப்படி கதவை திறக்க முடியும்? 1996 ஆம் ஆண்டு சுயேச்சையாக ஒன்றிய செயலாளராக வென்றேன்.

அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்தித்தேன். அப்போது நான் வேட்பு மனு தாக்கலில் குறிப்பிட்டுள்ள சொத்துகள் அப்படியே இருக்கின்றன. அதில் ஒரு சொத்தை மட்டும்விற்றுள்ளேன். மற்றபடி இன்று வரை நான் கணக்கு காட்டிய அந்த சொத்துகளை தாண்டி ஒரு சதுர அடி நிலம் கூட நான் வாங்கவில்லை. என் குடும்பத்தினர் பெயரிலும் வாங்கவில்லை. இனியும் ஒரு சதுர அடி கூட நாங்கள் வாங்க மாட்டோம். இதுவரை 40 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது. இதில் யார் வரி ஏய்ப்பு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும். ஐடி அதிகாரிகள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சோதனை செய்யலாம். முழு ஒத்துழைப்பை வழங்குவேன்” என்று தெரிவித்தார்.