அரசின் பொது நிதியை கையாளும் அதிகாரிகள் அதை செலவிடும்போது கூடுதல் கவனம் தேவை- ஐகோர்ட்

அரசின் பொது நிதியை கையாளும் அதிகாரிகள் அதை செலவிடும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், பொது நிதியை வீணாக்குவதை அனுமதிக்க முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகா, அடையாளம்பட்டு கிராமத்தில் உள்ள பாடசாலை தெருவில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை இடிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி அப்பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கழிப்பிடம் கட்டப்பட்டுள்ள நிலம் பொதுப்பாதை என்பதாலும், தனியார் பட்டா நிலம் என்பதாலும், புதிய இடம் கண்டறியப்பட்டு கழிப்பிடம் கட்டப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுக் கழிப்பிடங்களை பாதையிலும், தனியார் பட்டா நிலத்திலும் கட்ட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், அரசு நிதியை கையாளும் அதிகாரிகள், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டுமென்றும், பொது நிதியை வீணாக்குவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், தவறுதலாக பொதுப் பாதையிலும், தனியார் பட்டா நிலத்திலும் பொதுகழிப்பிடம் கட்டிவிட்டதாக கூறமுடியாது எனக் கூறிய நீதிபதிகள், ஆறு வாரங்களில் மாற்று இடத்தை கண்டறிந்து, பொது பாதையிலும், தனியார் பட்டா நிலத்திலும் கட்டப்பட்ட கழிப்பிடத்தை இடிக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.