இது ஜனநாயகத்தை காக்கும் முக்கிய கூட்டம் - நவீன் பட்நாயக்

தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாவிட்டால் நாடு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கும் என ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றுள்ளனர். கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பங்கேற்றுள்ளனர். 29 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், 20க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டுக் குழு கூட்டத்தில் ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இது ஜனநாயகத்தை காக்கும் முக்கிய கூட்டம். தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாவிட்டால் நாடு பெரும்
பிரச்சினையை எதிர்கொண்டிருக்கும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை தீர்மானிக்க கூடாது. கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.