ஒடிசாவில் நடந்த பகீர் சம்பவம்: புதைக்கப்பட்ட சகோதரியின் சடலத்தை வங்கிக்குத் தூக்கி வந்த சகோதரன்..!

 
1

ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த தொழிலாளி ஜீது முண்டா. இவரது மூத்த சகோதரி கல்ரா முண்டா (56) இரண்டு மாதம் முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.அவரது வங்கி கணக்கில் ரூ.20 ஆயிரம் பணம் இருந்துள்ளது. உயிரிழந்த கல்ரா தனது கால்நடைகளை விற்றதன் மூலம் அந்த தொகையை சேமித்து வைத்திருந்தார். 

சகோதரி இறந்த நிலையில், அவரது கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு சகோதரர் ஜீது முண்டா வங்கியை அணுகியுள்ளார்.இருப்பினும், வங்கி அதிகாரிகள் பணத்தை எடுப்பதற்கு இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அவரிடம் கேட்டனர். ஆனால் அவரிடம் எந்த சான்றும் இல்லை. படிப்பறிவு இல்லாத ஜீது முண்டாவுக்கு, வங்கி அதிகாரிகள் கூறும் நடைமுறைகள் எதுவும் புரியவில்லை.

'இறந்து போனதற்கு உரிய ஆவணம் வேண்டும், இல்லையெனில் வங்கி கணக்கு யார் பெயரில் இருக்கிறதோ அவர் நேரில் வர வேண்டும்' என்று அதிகாரிகள் அவரிடம் கறாராக தெரிவித்துள்ளனர்.வெறுப்படைந்த ஜீது முண்டா, 2 மாதங்களுக்கு முன் இறந்த தன் சகோதரியின் சடலத்தை புதைகுழியில் இருந்து தோண்டியெடுத்தார். அதை தோளில் வைத்துக் கொண்டு நேராக வந்தவர், வங்கி முன் இறக்கி வைத்து விட்டார். இதைக்கண்டு வங்கி அதிகாரிகள் அலறினர். போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

பிரச்னையை புரிந்து கொண்ட போலீசார், இறந்த சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க உதவுவதாக ஜீது முண்டாவுக்கு உறுதியளித்தனர். பின்னர், போலீசார் முன்னிலையில் அந்த சடலம் மீண்டும் மயானத்தில் புதைக்கப்பட்டது.