அக். 2 முதல் அனைத்துப் பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம் – தமிழக அரசு..!
சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், தமிழ் வளர்ச்சி மற்றும் கல்வித்துறை, உயர்கல்வித்துறை ஆகிய துறைகளில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் விஜய், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசுகையில், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை இவ்வரசு முதன்மையாகக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, ‘வெற்றிப் பயணம்” என்கிற பெயரில் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதன்படி தற்போது பெண்கள் மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் குறிப்பிட்ட அரசுப் பேருந்துகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கட்டணமில்லா பயணத் திட்டம், இனி கூடுதல் வகை பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதிப் பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர்ப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் முதல்வர் விஜய் அறிவிப்பையடுத்து வருகின்ற அக்டோபர் 2 முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளிலும், புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள முடியும்.
வருமான உச்சவரம்பு இல்லை…
தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கு ஆண்டுதோறும் சுமார் ரூபாய் 6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என குறிப்பிடப்படடுள்ளது. பெண்கள் இத்திட்டத்தைப் பெறுவதற்கு வருமான உச்சவரம்போ அல்லது மேற்கொள்ளப்படும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை எனவும் திருநங்கைகளும் கட்டமணில்லா பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்.

