அகம்பாவத்தினாலும், சிலரின் ஆணவத்தினாலும் வந்த தோல்வி - ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்

 
ops

அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 
அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 8 ஆயிரத்து 474 வாக்குகளும் பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்றிருந்தார். த.மா.கா வேட்பாளர் யுவராஜைவிட தற்போது 15 ஆயிரம் வாக்குகள் குறைவாக அதிமுக வேட்பாளர் தென்னரசு பெற்றுள்ளார். வெற்றி வித்தியாசத்தைவிட அதிமுக வேட்பாளர் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகள் குறைவாக உள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள மேற்கு மண்டலத்திலேயே தென்னரசு பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்தும் மொத்தம் பதிவான வாக்குகளில் பாதியை கூட பழனிசாமி தரப்பால் பெற முடியவில்லை. 

Ops

இந்நிலையில், தேர்தல் முடிவு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: தான் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்து செல்ல உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. விரைவில் அவை தொடங்கப்படும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.