முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள்..!
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.1.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றுகையில்;
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றும்,
குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 200 ரூபாயாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றும்,
அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றும்,
சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 100 ரூபாயும் வழங்கப்படும் என்றும்,
மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும்,
சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் மேற்கூறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும்,
இந்த அறிவிப்புகள் மூலம் தற்போதுள்ள சிறப்புக் காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள் என்று அறிவித்தார்கள்.
அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு சமூகநலத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒன்றியம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர்கள் பேரவை, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம், தமிழ்நாடு சத்துணவுப் பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுப் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். சத்துணவுப் பணியாளர் பேரவை, தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நல இயக்குநர் மா.சௌ. சங்கீதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் குழும இயக்குநர் ஐ.சா. மெர்சி ரம்யா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


