வறுமையால் கைவிட்ட காதலன்... தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நர்சிங் மாணவி

 
அ அ

திருத்தணி அருகே ஆந்திர மாநில இளைஞன் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் தற்கொலை செய்து கொண்ட நர்சிங் பயிற்சி பள்ளி மாணவியின் மரணத்திற்கு காரணமான இளைஞர் மற்றும் அவரது அத்தையை கைது செய்ய வலியுறுத்தி பிரேதத்தை வாங்காமல் உறவினர்கள் மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே  லட்சுமாபுரம் ஊராட்சியில் வசிப்பவர் கலாவதி. இவரது கணவர் செல்வம் இறந்து 9 வருடம் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் இருந்தனர். இதில் ஹரிதா (19) என்ற இவர்களது இளைய மகள் திருத்தணி தனியார் டிப்ளமோ நர்சிங் பயிற்சி பள்ளியில் படித்துவந்தார்.
இந்த நிலையில் ஹரிதா ஆந்திராவில் வசிக்கும் உறவுக்கார பையனான கர்நாடக மாநிலம் பெங்களூரில் லிப்ட் ஆப்பரேட்டிங் பணியில் உள்ள திலீப் (25) என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டு நட்பு காதலாக மாறி இரண்டு வருடமாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விஷயம்  திலீப்பின் தாய் கோவிந்தம்மாளுக்கு தெரியவரவே ஹரிதாவை  திருமணம் செய்து கொள்ளக்கூடாது. வசதி குறைவு என்று திலிப்பிடம் தெரிவித்துள்ளார். 

இதனால் இரண்டு ஆண்டு காலமாக நெருக்கமாக பழகிய திலீப், கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று  ஹரிதாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஹரிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் ஒன்று அவரது தாய் கலாவதிக்கு எழுதியுள்ளார். அதில், “நீ கஷ்டப்பட்டு என்னை வளர்த்தாய்... நான் என்ன தவறு செய்தாலும் என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டாய்.  அக்கா அனிதா மற்றும் தம்பி கௌதம் ஆகியோரை நல்லபடியாக பார்த்துக் கொள். அக்கா அனிதா, அம்மாவை நன்றாக பார்த்துக் கொள். எனது மனது வலிக்கிறது. உங்களை விட்டு பிரிகிறேன். எனது மரணத்திற்கு காரணம் திலீப் மற்றும் அவரது சித்தி கோவிந்தம்மா ஆகியோர்களை சும்மா விடாதீர்கள்” என்று எழுதிவிட்டு ஐ மிஸ் யூ மை ஃபேமிலி என்று ஆங்கிலத்தில் எழுதி விட்டு வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு ஹரிதா தற்கொலைசெய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து  தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ஹரிதா பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஹரிதா எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். ஆனால் கனகம்மாசத்திரம் போலீசார் இளம் பெண் மரணத்திற்கு காரணமான கோவிந்தம்மாள் மற்றும் காதலன் திருமணம் செய்ய மறுத்த திலீப் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கைது செய்யவில்லை எனக்கூறி ஹரிதா பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் ஹரிதா பிரேதத்தை வாங்காமல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திடீரென்று ஹரிதாவின் தாய் கலாவதி மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.