'கழுதை' பெயரில் நர்சிங் சான்றிதழ்! மக்களின் உயிரோடு விளையாடும் பயங்கர கூத்து!
‘கழுதை’யின் பெயரிலேயே தற்காலிக செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த விண்ணப்பத்தில் தந்தையின் பெயர் "கழுதை தந்தை" என்றும், மதம் "பிற" என்றும், ஜாதி "விலங்கு" என்றும், முகவரி "கிடைக்கும் இடம்" என்பது போன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கழுதையினுடைய புகைப்படமும் பதிவேற்றப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, மாநில நர்சிங் கவுன்சிலின் மூலம் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஒரு டிஜிட்டல் சான்றிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், விண்ணப்பதாரர் 2021 ஜூலை 16 முதல் 2025 ஆகஸ்ட் 13 வரை போபால் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் பயிற்சியை முடித்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் நர்சிங் கல்லூரிகளில் போலி அங்கீகாரம் மற்றும் ஊழல் புகார்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்த மாநில நர்சிங் கவுன்சிலின் புதிய இணையதள சரிபார்ப்பு முறையின் நம்பகத்தன்மையைச் சோதித்துப் பார்ப்பதற்காக மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ-யின் மாநில துணைத் தலைவர் ரவி பார்மர் முடிவெடுத்தார். அதன்படி, இணையதளத்தில் செவிலியர் பதிவுக்காக ஒரு மாதிரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர் இடத்தில் ‘கழுதை’என்றும், பெற்றோர் பெயர் உள்ள இடங்களில் ‘கழுதை தந்தை’ மற்றும் ‘கழுதை தாய்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஜாதிப் பிரிவில் ‘விலங்கு’ என்றும், முகவரியில் "கிடைக்கும் இடம்" என்பது போன்று கற்பனையான விவரங்களும் பதிவு செய்யப்பட்டன. ஆவணங்களின் இடத்தில் வெற்றுத் தாள்களும், புகைப்படப் பிரிவில் ஒரு நிஜக் கழுதையின் புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இத்தகைய போலியான விவரங்களுடன் தேவையான பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட வெறும் 5 நிமிடங்களில், எந்தவித நேரடி கள ஆய்வோ அல்லது ஆவணச் சரிபார்ப்போ இன்றி, போபால் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் முடித்ததாகக் குறிப்பிட்டு ‘கழுதை’யின் பெயரில் முறைப்படி அதிகாரப்பூர்வ தற்காலிக டிஜிட்டல் சான்றிதழை கவுன்சில் வழங்கியுள்ளது.
சான்றிதழில், விண்ணப்பதாரர் 2021 ஜூலை 16 முதல் 2025 ஆகஸ்ட் 13 வரை போபால் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் பயிற்சியை முடித்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்தச் சான்றிதழ் "பதிவுசெய்யப்பட்ட செவிலியர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மகப்பேறு உதவியாளர்" என்பதற்கான பதிவு குறிப்பிட்டிருப்பதுடன், 2031 செப்டம்பர் வரை செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நர்சிங் கவுன்சில் அதிகாரிகள், "மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பதிவை வெளிப்படையானதாக மாற்றவும், காகிதப் பணிகளைக் குறைக்கவும், இடைத்தரகர்களின் தலையீட்டைத் தடுக்கவே இந்த தானியங்கி இணையவழி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ததும், பதிவு எண் உருவாக்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து தகுதிகள் மற்றும் ஆவணங்கள் இணையவழியில் சரிபார்க்கப்படுகின்றன. மோசடியான தகவல்கள், புகைப்படங்கள் அல்லது ஆவணங்கள் கண்டறியப்பட்டால், ஏழு முதல் 15 நாள்களுக்குள் பதிவுகள் ரத்து செய்யப்படலாம் என்று கூறினார்.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் சமர்ப்பிக்கும் தகவல்கள் மற்றும் ஆவணங்களின் நம்பகத்தன்மைக்கு அவர்களே பொறுப்பு என்று கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.மேலும், "தற்காலிகப் பதிவிற்கும் நிரந்தரச் சான்றிதழுக்கும் வித்தியாசம் உள்ளது. விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும் உடனடியாக உருவாக்கப்படும் இது வெறும் தற்காலிகப் பதிவு மட்டுமே; இந்தத் தற்காலிகப் பதிவு, நர்சிங் கவுன்சிலின் சரிபார்ப்புக்கு உட்பட்டது" என்று தெரிவித்தனர்.

