புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு !

 
1

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் வழங்கப்பட்ட 2.24 கோடி குடும்பங்களுக்கான ரேஷன் கார்டுகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இதன்மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இலவசமாகவும், சலுகை விலையிலும் ரேஷன் கடைகள் அளிக்கின்றன. ரேஷன் கார்டு மூலம் குடும்பத்துக்கு தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்படுவது ஒருபுறம் என்றால் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கும் ரேஷன் கார்டுகள் முக்கிய ஆவணமாக உள்ளது.

குறிப்பாக, தமிழக அரசு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரேஷன் கார்டு பிரதானமாக பார்க்கப்படுகிறது. இதனால், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்படவில்லை. அதற்குள்ளாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதால், அதனை பரிசீலிக்க முடியவில்லை.

இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், ”தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஜூன் 4ல் தேர்தல் முடிவுகள் வெளியாகும், நடத்தை விதிமுறைகள் ஜூன் 6 வரை அமலில் இருக்கும் என்பதால், அதன்பிறகு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் துவங்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றபின் புதிதாக 2 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்” என்றனர்.