புரட்சியாளர் அண்ணன் பழனிபாபாவுக்கு வீர வணக்கம் - சீமான்
தான் பிறந்த சமூகமும் அடிமைப்பட்டு விடக் கூடாது என்பதற்காக போராடிய பெருந்தகை அண்ணன் பழனிபாபா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்முன்னே நடக்கும் அநீதியை எதிர்த்து போராடுபவன் எவனோ அவனே உண்மையான ஜிகாத் என்ற பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களின் மறைமொழிக்கிணங்க, தான் பிறந்த மண்ணிற்காகவும் மக்களுக்காவும் வாழ்வின் இறுதிநொடிவரை நேர்மையாக நின்று போராடிய புனிதப்போராளி புரட்சியாளர் பழனிபாபா அவர்களின் நினைவுநாள் இன்று. அநீதியை எதிர்க்கத் துணிவில்லாதவன் சகித்துக்கொள்கிறான். தொடர்ச்சியாக சகித்துக்கொள்பவன் அடிமையாகிறான். அப்படி தானும், தான் பிறந்த சமூகமும் அடிமைப்பட்டு விடக் கூடாது என்பதற்காக போராடிய பெருந்தகை அண்ணன் பழனிபாபா அவர்கள்.
ஒரு காலம் வரும் அப்போது எழுச்சி மிக்க இளைஞர் சமுதாயம் உருவாகும். அது எழுந்துவந்து என்னை புதைத்த இடத்தில் என் எலும்புகூடுகளை தோண்டி எடுத்து எனக்கு நன்றி செலுத்தும்; ஏனேன்றால் நான் பேசுவதெல்லாம் கனிகள் அல்ல; அவ்வளவும் விதைகள்; அது முளைத்து வரும்நாளில் வரலாறு என்னை விடுதலை செய்யும் என்று முழங்கிய புரட்சியாளர்! தமிழர்களே! நீங்கள் மதமாக நின்றால் ஆளப்படுவீர்கள், அச்சுறுத்தப்படுவீர்கள், அதையே இனமாக நின்றீர்களேயானால் வலிமைபெறுவீர்கள். தமிழர்களே, இனப்பற்று போதாது. இனவெறி கொள்க! இல்லாவிட்டால், ஆளப்படுவாயே ஒழிய, ஒருபோதும் ஆளமாட்டாய். சிறுபான்மை என்று சொன்னால், சலுகைகள் கிடைக்குமேயொழிய, உரிமைகள் கிடைக்காது. எனவே, நாம் தமிழர்களாக ஒன்றிணைவோம்! நாங்கள் இங்கேதான் இருந்தோம். மார்க்கம்தான் எங்களிடத்தில் வந்தது. இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் நாங்கள் என்ற உண்மையை உலகிற்கு உரக்கச்சொன்ன தமிழினப்போராளி.
கண்முன்னே நடக்கும் அநீதியை எதிர்த்து போராடுபவன் எவனோ அவனே உண்மையான ஜிகாத் என்ற பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களின் மறைமொழிக்கிணங்க, தான் பிறந்த மண்ணிற்காகவும் மக்களுக்காவும் வாழ்வின் இறுதிநொடிவரை நேர்மையாக நின்று போராடிய புனிதப்போராளி புரட்சியாளர் பழனிபாபா அவர்களின் நினைவுநாள்… pic.twitter.com/9CCX39JWbB
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) January 28, 2024
தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக, உரிமை மீட்பிற்காக, குறிப்பாக இசுலாமிய சமூக மக்களை அரசியல் படுத்துவதற்காக தமது இளமை முழுவதையும் அர்ப்பணித்து வாழ்ந்த ஈக மறவர். தென்தமிழ்நாட்டு பிள்ளைகள் உயர்கல்வி பெரும்பொருட்டு பெருந்தமிழர் மூக்கையாத்தேவர் அவர்கள் கல்லூரி தொடங்க எண்ணி, அவரது அளப்பரிய முயற்சியில் தொடங்கிய மூன்று கல்லூரிகளுக்கும் பெருநிதியை வாரி வழங்கி உதவிய வள்ளல் அண்ணன் பழனிபாபா அவர்கள். அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாது, ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள், அவர் கருத்துக்கு எதிர் கருத்து வைக்க திறனற்றவர்களால் அவர் உடல் மண்ணில் வெட்டி வீழ்த்தப்பட்டபோதும், அவரது உன்னத இலட்சியங்களை, உயரிய கொள்கைகளை ஒருபோதும் வீழ்த்த முடியாது வரலாற்றில் நிலைபெற்று, காலங்காலமாக தமிழிளம் தலைமுறை பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிறது! அவர் காட்டிய வழிதடத்தை பின்பற்றி அநீதிகளுக்கு எதிராக, அடிமைப்படுத்தப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் எளிய மக்களின் விடுதலைக்காக, அவர்களின் பாதுகாப்பான நல்வாழ்விற்காக சமரசமற்று போராட உளமாற உறுதியேற்பதே அண்ணன் பழனிபாபா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும். புரட்சியாளர் அண்ணன் பழனிபாபா அவர்களுக்கு எமது வீர வணக்கம் என குறிப்பிட்டுள்ளார்.