தமிழகத்தில் வெற்றிடம் இருக்க தான் செய்கிறது - சீமான் பேட்டி
ரஜினிகாந்த் கூறியது போல் நல்ல தலைமைக்கு தமிழகத்தில் வெற்றிடம் இருக்க தான் செய்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று சந்தித்துள்ளார். நேற்று இரவு 8 மணி அளவில் ரஜினிகாந்த்- சீமான் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீண்ட இந்த சந்திப்பில் இருவரும் தற்கால அரசியல் சூழல் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்குப்பின் நடிகர் ரஜினிகாத்தை நேரடியாக சீமான் சந்தித்துள்ளார்.
இந்த நிலையில், ரஜினி உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நீண்ட நாட்களாகவே ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். நான் நினைத்த நேரம் அவருக்கு படப்பிடிப்பு இருந்ததால் சந்திக்க முடியவில்லை. அவர் சந்திக்க நினைத்த நேரத்தில் நான் அரசியல் பயணத்தில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று மரியாதை நிமித்தமாக இருவரும் சந்தித்தோம். நிறைய விஷயங்கள் குறித்து பேசினோம். அனைத்தையும் பொதுவெளியில் சொல்லமுடியாது. ரஜினிகாந்த் கூறியது போல் நல்ல தலைமைக்கு தமிழகத்தில் வெற்றிடம் இருக்க தான் செய்கிறது. மக்கள் தான் சரியான தலைமையை தேர்வு செய்ய வேண்டும் என கூறினார்.