பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிட வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் - சீமான் அறிவிப்பு

 
seeman

பரந்தூர் விமான நிலைய திட்டத்தினை ஆளும் திமுக, பாஜக அரசுகள் முழுவதுமாக கைவிடும் வரை நாம் தமிழர் கட்சி மக்கள் போராட்டத்திற்கு தொடர்ந்து வலுசேர்க்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

இது தொடர்பாக சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் மற்றும் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் 300-வது நாளாகத் தொடர் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். தற்சார்பு வாழ்வியலை வேண்டும் உழைக்கும் மக்களை, வளர்ச்சி எனும் பெயரில் ஒடுக்கி, பன்னாட்டுப் பெரு முதலாளிகளின் இருப்பிற்காக மட்டுமே பணிபுரியும் ஆளும் அரசுகள், மக்களின் வலிமிகுந்த சொற்களை ஒரு பொழுதும் மதிப்பதில்லை. இது ஏகனாபுரத்தின் சிக்கல் மட்டுமல்ல. இத்திட்டம் நிறைவேறினால் குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளநீர் அபாயமும், சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களையும் பாதிக்கும். பெரும் சூழலியல் அழிவும் நிகழும். 

ஆகையால், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தினை ஆளும் திமுக, பாஜக அரசுகள் முழுவதுமாகக் கைவிடும் வரை நாம் தமிழர் கட்சி மக்கள் போராட்டத்திற்கு தொடர்ந்து வலு சேர்க்கும். இதன் துவக்கமாக ஜூன் 10, 2023 அன்று மாபெரும் ஆர்ப்பாட்ட வடிவில் காந்தி சாலை, காஞ்சியில் களம் காண்கிறோம். சூழலியல் அக்கறை மற்றும் மக்கள் நலம் கருத்தில் கொண்ட உறவுகள் அனைவரையும் எங்களுடன் கைகோர்க்கப் பேரழைப்பு விடுக்கிறேன்.  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.