இனி வெறும் 2 மணி நேரம் 7 நிமிடங்களில் மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லலாம்..!

 
1

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது 

நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை அகமதாபாத் மற்றும் மும்பை நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெறும் இரண்டு மணி நேரம் ஏழு நிமிடங்களாகக் குறைக்கும்.

"மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான முதல் புல்லட் ரயில் சேவை மிக விரைவில் தொடங்க உள்ளது, மேலும் இந்தத் திட்டத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நாட்டின் முதல் புல்லட் ரயில் ஓடத் தொடங்கும்போது, மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான பயணம் வெறும் 2 மணி நேரம் 7 நிமிடங்களாக மட்டுமே இருக்கும்" என்றார்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே 508 கிலோ மீட்டர் தூரம் இயக்கப்பட உள்ளது. மணிக்கு 320 கி.மீ. வேகத்தில், இது மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) தொடங்கி குஜராத்தின் வாபி, சூரத், ஆனந்த், வதோதரா மற்றும் அகமதாபாத் பகுதிகளை இணைக்கும்.

இதனிடையே விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் போர்பந்தர் மற்றும் ராஜ்கோட் இடையே ஒரு புதிய ரயில், ரணவாவ் நிலையத்தில் ரூ.135 கோடியில் கோச் பராமரிப்பு ஆலை, போர்பந்தர் நகரில் ஒரு ரயில்வே மேம்பாலம், இரண்டு கதி சக்தி கார்கோ டெர்மினல்ஸ் மற்றும் பாவ்நகரில் வரவிருக்கும் துறைமுகத்தில் ஒரு கன்டெய்னர் டெர்மினல் ஆகியவை குஜராத்தில் வரவிருக்கும் சில ரயில்வே திட்டங்கள் என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி அரசின் நிர்வாகம் தொடங்கியுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் நமோ பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறித்தும் மத்திய அமைச்சர் பேசினார். "இதுவரை 8 அமிர்த பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அவற்றில் வந்தே பாரத் ரயில்கள் போன்ற அம்சங்கள் உள்ளன, ஆனால் கட்டணம் குறைவு. மேலும் இந்த ரயில்கள் நவீன யுக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த ரயில்களை பயன்படுத்தும் பயணிகளின் பயண அனுபவங்களை கேட்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்" என்றார்.