இனி மகளிர் உரிமை தொகை 1000 இல்ல 1500..! அமைச்சர் குறிப்பிட்ட அந்த 'இனிப்பான செய்தி'..!
தமிழ்நாடு அரசு பெண்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது மகளிர் உரிமை தொகை திட்டம். நாட்டிற்கே முன்னோடி திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து பல மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அரசு மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்கும் அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி 44-வது வார்டில் தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல் வைத்தனர் இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும் என அமைச்சர் ஐ பெரியசாமி கூறியிருப்பது தற்போது தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
அவர் தெரிவித்ததாவது., காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை, தி.மு.க.வை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது, இதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார். தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடந்த டிசம்பரில் தான் விரிவாக்கம் செய்தது. தற்போது தமிழ்நாட்டில் 1.30 கோடிக்கும் அதிகமான பெண்கள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். பெண்களுக்கு விரைவில் இனிப்பான செய்தி வரும் என்றார்.
அரசு மகளிர் உரிமைத் தொகையை எப்போதிலிருந்து உயர்த்தி வழங்கப் போகிறது எவ்வளவு உயர்த்தி வழங்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் ஐ பெரியசாமி பொங்கல் பண்டிகை முடிவதற்குள் பெண்களுக்கு ஒரு நற்செய்தி வரும் எனக் கூறியிருப்பது மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்கும் அறிவிப்பாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கிறது.
2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வுக்கு மகளிர் வாக்குகள் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது மகளிர் உரிமை தொகை திட்டம். 2023-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்பட்டுவிடுகிறது.
இந்த திட்டத்தில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய பணம் குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவு , சிறு சேமிப்பு என பல்வேறு விஷயங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என ஏராளமான பெண்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கூடிய விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன.


