இனி ஹோட்டலில் சாப்பிட யோசிக்கணும்.. டீ முதல் மீல்ஸ் வரை கிடுகிடு உயர்வு..!!
வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது.
வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் வர்த்தக சிலிண்டரின் விலை தற்போது ரூ.3,239-ஆக உள்ளது.
சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத் தட்டுப்பாடு மற்றும் தடைகள் காரணமாக விலை உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலிண்டரின் விலை உயர்வால் உணவு பண்டங்களின் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து, வருவாய் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே உணவுப் பொருட்களின் விலை 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட மதிய உணவு (மீல்ஸ்) ரூ.150-க்கும், 70 ரூபாய்க்கு விற்ற தோசை ரூ.90-க்கும், பூரி செட் 70 ரூபாயில் இருந்து 90 ரூபாய்க்கும், புரோட்டா 15 ரூபாயில் இருந்து 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. டீ, காபியின் விலை ரூ.5 வரை உயர்ந்துள்ளது.

