இனி ஐஸ்கிரீம் சாப்பிடும் முன் இதைச் செக் பண்ணுங்க! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

 
ice

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், சுட்டெரித்து வரும் வெயிலாலும் தமிழ்நாடு முழுவதும் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்துள்ளது. வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமான ஐஸ்கிரீம்களை வாங்கி சுவைப்பது அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் ஐஸ்கிரீம் நிறுவனங்கள் உற்பத்தியையும் அதிகரித்துள்ளன. இந்த சூழலில் ஐஸ்கிரீம் தயாரிப்பைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி சந்தையில் தேவை அதிகரித்திருப்பதால் உரிய உரிமம் இல்லாமல் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்வது, இயற்கை சர்க்கரைக்கு மாறாக சுவைக்காக நிறமிகள் மற்றும் செயற்கை சர்க்கரையைக் கலப்பது, குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் போன்ற கலப்படங்களை சேர்ப்பது, ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானம் தயாரிப்பில் அசுத்தமான நீரை பயன்படுத்துவது போன்ற விதிமீறல்களில் நிறுவனங்கள் ஈடுபடக்கூடும்.

எனவே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஐஸ்கிரீம் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் குளிர்பானம் உற்பத்தி நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தவும், கோடைகாலம் முழுவதும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உற்பத்தியில் உணவுப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும், மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக சோதனை நடத்துவதோடு, புகார்கள் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.