சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து புகாரளிக்க எண்கள் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயார் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் மகேஸ் குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். தொடர்ந்து மாநகராட்சியின் அவசர கண்கானிப்பு மற்றும் கட்டுபாட்டு அறையை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயார். மழை பாதிப்பு பணிகளுக்காக மொத்தம் 23 பணியாளர்கள் தயாராக உள்ளனர். இத்துடன் ஒவ்வொரு வார்டுகளுக்கும் கூடுதலாக பத்து பணியாளர்கள் என 2000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 10 செ.மீ அதிகமாக மழை பெய்தாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்படும். 24 மணிநேரம் இயங்கும் கண்கானிப்பு மற்றும் கட்டுபாட்டு அறை மூலம் மாநகராட்சி முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு 1913, 044-25619204, 044-25619207 என்ற எண்களை தொடர்புக் கொள்ளலாம். காவல், தீயணைப்புத்துறை என அனைத்து துறை ஒருங்கிணைந்த மீட்பு குழுவும் தயார்நிலையில் உள்ளனர்.
மாநகரின் பெரும்பாலான மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்று உள்ளது. மழைநீர் வடிகால்கள் இல்லாத பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 100hp திறன் கொண்ட மோட்டார்கள் வரை தயாராக வைக்கப்பட்டுள்ளது. பெரும் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்கள் தங்க வைக்கவும், உணவு வழங்கவும் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கன மழையின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க பழமையான கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து மாண்டல வாரியாக ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளோம். உறுதியில்லாத கட்டிடங்கள் கண்டறிந்தால் உரிமையாளர்களிடம் நோட்டீஸ் வழங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.