ஒன்றல்ல.. இரண்டல்ல... 253வது முறையாக இடைவிடாது தேர்தலில் போட்டியிடும் தேர்தல் மன்னன் பத்மராஜன்..!

 
1

மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 253வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரைச் சேர்ந்தவர் டாக்டர் கே. பத்மராஜன். 65 வயதான அவர், உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம், சட்டமன்றம், நாடாளுமன்றம், அதிபர், துணை அதிபர் ஆகிய தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதனால் அவரைத் தேர்தல் மன்னன் என்ற அடைமொழியோடு அழைக்கின்றனர்.

1988ஆம் ஆண்டு முதல் இதுவரை 252 தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்து 252 முறை தோல்வி அடைந்ததால் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

253வது முறையாக, திங்கட்கிழமை காலை மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் வேட்பாளராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவுக்கு வைப்புத் தொகை செலுத்த பணம் இல்லாததால் அவரது நண்பரிடமிருந்து பணம் பெற்று வைப்புத் தொகையைச் செலுத்தியுள்ளார்.