எந்த அணையிலும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒரு செங்கலைக் கூட எடுத்துவைக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன்..!

 
1

வேலூர் மாவட்டம், காட்பாடியில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இறுதிகட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது. வாக்கு கேட்கும்போது மதம், மதச்சார்பு, அதற்கான செய்கைகளை, நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்து வாக்கு கேட்கக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாகும். இந்நிலையில், தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானத்தில் அமர்ந்துள்ளார். இது தேர்தல் விதிமீறிய செயல் என்று அரசியல் தெளிவு பெற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தவிர, இந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் எத்தனையோ அத்து மீறல்களுக்கு உட்பட்டுள்ளன.

திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் மோடியின் செயல்களை தவறு என சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், இவை எதையும் காதில் வாங்குகின்ற நிலையில் அவர் இல்லை. காரணம், அவர் நம்மைப் போல் ஒரு மனிதனாக இருந்தால் இதெல்லாம் காதில் விழும். ஆனால், அவரோ ஒரு தெய்வப்பிறவி. அதனால், அதெல்லாம் அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

காந்தியடிகள் குறித்து பிரதமர் மோடி பேசியதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. காந்தி குஜராத்தை சேர்ந்தவர், அவரது ஆசிரமம் அங்கு தான் உள்ளது. அதைக்கூட மோடி பார்த்திருக்க மாட்டாரா? காந்தி குறித்து தெரியாதா?. மோடியின் பேச்சு காந்தி மீது எவ்வளவு வஞ்சகம் கொண்டிருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.

இந்திய தியாகிகளை திமுக மறைத்ததாக கூறுகின்றனர். அதை மறைத்தது தமிழக ஆளுநர் தான். ஒரு விழாவுக்கு ஆளுநர் மாளிகைக்கு சென்றிருந்த போது ஆளுநர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை. அதை மறைத்தவர் ஆளுநர் தான். அவரும் சட்ட மரபினை மீறி செயல்படுகிறார். இப்படிப்பட்ட நிலைமை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகும்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசு விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்திருந்தாலும், தமிழகத்திடம் அனுமதி பெறாமல் ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க முடியாது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்பில் திட்டவட்டமாக கூறியுள்ளது. கண்காணிப்பு குழுவுக்கோ, காவேரி மேலாண்மை வாரியத்துக்கோ, மத்திய நீர்வளத் துறைக்கோ அல்லது மத்திய அரசுக்கோ எங்கு வேண்டுமானாலும் கேரள அரசு மனு அளிக்கலாம். ஆனால், தமிழகத்தின் ஒப்புதல் இல்லை என்றால் அந்த மனுக்களை நிராகரிக்கப்படும்.

ஆகவே, சிலந்தி ஆறு, முல்லைப் பெரியாறு, மேகேதாட்டு அணை என எந்த அணையானாலும் எக்காரணத்தை கொண்டும், உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்றி, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அங்கு ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க முடியவே முடியாது. முல்லைப் பெரியாறில் தமிழன்னை படகு 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் என்ன பழுது ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒடிசாவை தமிழர் ஆள்வதா? என அமித்ஷா பேசியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஒடிசா என்பதே அப்போதைய கலிங்கம் தானே. சோழ மன்னர்கள் ஆண்ட காலத்தில் ஒடிசா தமிழர்களின் வசமாகத்தான் இருந்தது. தவிர, தமிழர்கள் இலங்கை வரை சென்று ஆட்சி புரிந்துள்ளார்கள். இப்போது ஒடிசாவில் ஒரு தமிழர் செல்வாக்குடன் உள்ளார். அதில் என்ன பிரச்னை உள்ளது?. தமிழகத்தில்கூட எத்தனை வடமாநிலத்தவர் செல்வாக்குடன் உள்ளனர். இதெல்லாம் அமித் ஷாவுக்கு தேவையில்லாத ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.