வடகிழக்கு பருவமழை: ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..

 
stalin

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும். நடப்பாண்டு அக்டோபர் 15ம் தேதிக்குமேல் எப்போது வேண்டுமானாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனையொட்டி வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.ஆர்.ஆர். ராமச்சந்திரன், எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியம், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அரசுத்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். 

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ முன்னெச்சரிக்கை என்பது இருந்தால் எந்த பாதிப்பையும் தடுத்துவிடலாம். காலநிலை மாற்றத்தால் வடகிழக்கு பருவமழை சில நாட்களிலேயே மொத்தமாக பெய்துவிடுகிறது. வானிலை தரவுகளை உடனுக்குடன் வழங்க தரம் உயர்த்தப்பட்ட செயல்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1,400 தானியங்கி மழைமானி, 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

rain
 
ஓரிரு நாளில் அதிக மழை பெய்வதால் அதனை எதிர்கொள்ள சிரமமாக உள்ளது. துல்லியமான வானிலை ஆய்வு மைய செய்தியால் பேரிடர் பாதிப்புகளை தவிர்க்க முடியும். கடந்த காலங்களில் சென்னை, நெல்லை, தூத்துக்குடியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் 3 மாவட்டங்களில் விரைவாக இயல்புநிலை திரும்பியது.

வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு உள்ளது? அதை விரைந்து முடிக்க வேண்டும். வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழையால் ஏற்படும் சேதங்களை கையாள தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். 

மரம் விழுந்தால் அதை வெட்டி அப்புறப்படுத்துவதற்கான எந்திரங்கள், மீட்பு பணிகளுக்கான படகுகள், ஜே.சி.பி. எந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். சென்னையில் மழை வெள்ளத்தை தடுக்க அடையாறு, கூவம் ஆறுகளில் தூர்வாரும் பணிகளை ரந்து முடிக்க வேண்டும். கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.