“ஊரு விட்டு ஊரு பிழைக்க வந்த நாய்”- வடமாநில இளைஞர் மீது காவலர் தாக்குதல்
ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவிலில், 10 மணியை கடந்து உணவகத்தை திறந்து வைத்திருந்த வடமாநில தொழிலாளியை காவலர் ஒருவர் தகாத வார்த்தைகள் பேசி தாக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சி கோவில் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர் ஒருவர், இரவு நேர ரோந்து பணியின் போது பத்து மணியை கடந்து 20 நிமிடங்கள் கூடுதலாக ஃபாஸ்ட் ஃபுட் துரித உணவகம் திறந்து இருப்பதை கண்டு கடையை மூடுமாறு அங்குள்ள ஊழியர்களிடம் கூறுகிறார். ஆனால் கடையின் உரிமையாளர் வெளியே சென்று இருப்பதால் சற்று தாமதமாகும் என்றும் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளி பதிலளித்திருக்கிறார். ஆனால் இதனை ஏற்க மறுத்த காவலர் அங்கிருக்கும் பொருட்களை தனது கையில் இருந்த தடியால் தள்ளிவிட்டு வட மாநில தொழிலாளியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
சிசிடிவி காட்சியின் பதிவுகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அப்பகுதி வணிகர்கள், ஊரு விட்டு ஊரு பிழைக்க வந்த நாய் என்று வட மாநில தொழிலாளியை அச்சுறுத்தும் வகையில் பேசி நாளை இந்த இடத்தில் கடை வைக்க முடியாது என்று மிரட்டும் வகையில் பேசியதுடன் தொழிலாளியை தாக்கும் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


