ஈரோட்டில் வேட்பு மனு தாக்கல் நிறைவு- இன்று ஒரே நாளில் 56 பேர் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத் தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த பத்தாம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று திமுக வேட்பாளர் சந்திரகுமார் மனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன், ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராஜ், திமுக மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர். அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலெட்சுமியும் வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று ஒரே நாளில் 56 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கடந்த 2023.ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலில், 93 வேட்பாளர்கள் 121 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 6 பேர் திரும்ப பெற்ற நிலையில், 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் கடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.