#BREAKING வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை ( மார்ச் 30) தொடங்குகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் நாளை ( மார்ச் 30) தொடங்குகிறது.
இதன்படி 234 தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 6 கடைசி நாளாக இருந்தாலும் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, 1881ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ், பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை), 01.04.2026 (புதன்கிழமை), 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. இதன்படி, 30, மார்ச் 2,4,6 ஆகிய நாட்களில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
வேட்பாளர்கள் வேட்பு மனுவினை இணையவழியில் (Suvidha Portal) பூர்த்தி செய்யலாம். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத்தாக்கலின் போது நேரில் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து வேட்பு மனுக்களும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேற்குறிப்பிட்ட வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நாட்களில் நேரில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும்.வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சி வேட்பாளராக இருந்தால் அவரை அவர் போட்டியிடும் தொகுதியைச் சேர்ந்த ஒரு வாக்காளர் முன்மொழிய வேண்டும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர் அல்லது சுயேட்சை வேட்பாளர் என்றால் அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 வாக்காளர்கள் அவரை முன்மொழிய வேண்டும்.
பொது தொகுதிக்கு ரூ.10 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். மேலும் வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் சேர்த்து உறுதிமொழி பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும். அதில், வேட்பாளரின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வலைதள கணக்குகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும். மேலும் வேட்பாளர் மற்றும் அவரது துணைவி அல்லது துணைவர், வேட்பாளரை சார்ந்தவர்கள் ஆகியோர் கடந்த ஐந்து ஆண்டுகளாக வருமான வரி கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானத்தை தெரிவிக்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மற்றும் தண்டனை பெற்ற குற்ற வழக்குகளின் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இதை தவிர்த்து, வேட்பாளர் மற்றும் அவரது துணைவி அல்லது துணைவர், வேட்பாளரை சார்ந்தவர்களின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

