டாடா குழுமத்தின் தூண்: நோயல் டாடாவின் தாயார் சிமோன் டாடா காலமானார்..!

 
1 1

டாடா குழுமத்தின் மறைந்த முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் வளர்ப்புத் தாயும், தற்போதைய டாடா குழுமத் தலைவர் நோயல் டாடாவின் தாயாருமான சைமன் டாடா தனது 95-வது வயதில் காலமானார். முதுமை காரணமாக அவர் முதலில் துபாய் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் மும்பை அழைத்து வரப்பட்டு, பிரீச்கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை அவர் உயிர் நீத்தார். அவரது மறைவுக்குப் பல தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் பிறந்த சைமன், 1953 ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சுற்றுலா வந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேவல் டாடாவைத் திருமணம் செய்துகொண்டார். 1960 களில் டாடா குழுமத்தில் பணியாற்றத் தொடங்கினார். டாடா ஆயில் மில்ஸ் கம்பெனியின் துணை நிறுவனமாக இருந்த லக்மேவில் போர்டு உறுப்பினராக இணைந்த அவர், அந்த நிறுவனத்தை இந்தியாவின் மிகப் பெரிய காஸ்மெடிக்ஸ் பிராண்டாக மாற்றினார். சுதந்திரம் பெற்ற காலத்தில் வெளிநாட்டுப் பொருட்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியச் சந்தையில், இந்தியப் பெண்களுக்கு ஏற்ற வகையில் லக்மேவில் பல புதுமைகளைப் புகுத்தியதால், இவர் 'Cosmetic Czarina of India' என்ற செல்லப் பெயரால் அழைக்கப்பட்டார்.

இந்தியாவில் பொருளாதாரத் தாராளமயமாக்கல் நடந்தபோது, லக்மே மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனங்கள் இணைந்து 1996 ஆம் ஆண்டு 50:50 சதவிகிதப் பங்களிப்புடன் ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்க இவர் வழிவகுத்தார். 1998 ஆம் ஆண்டு வாக்கில், லக்மே தனது பிராண்டுகள் மற்றும் 50 சதவீதப் பங்குகளை இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்துக்கு சுமார் ₹200 கோடிக்கு விற்றது. இதன் தொடர்ச்சியாக, அழகு சாதனப் பொருட்களிலிருந்து ஃபேஷன் மற்றும் துணிகள் சில்லறை விற்பனைக்கு மாறிய அவர், வெஸ்ட்சைட் மற்றும் ஜூடியோவின் தாய் நிறுவனமான டிரெண்ட்ஸை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைமன் டாடாவின் மறைவு குறித்து டாடா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "டாடா நிறுவனத்தின் தூண் போன்ற சைமன் டாடா மறைந்துள்ளார். லக்மே, வெஸ்ட்சைட் நிறுவனங்களைப் முன்னணி பிராண்டாக மாற்றியவர். டாடா அறக்கட்டளை மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது நேர்மறையான எண்ணங்கள் எங்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களைச் சந்தித்து வெற்றி பெற்றவர். இறைவன் அருகில் அவர் இளைப்பாறட்டும்" என்று புகழாரம் சூட்டியுள்ளது.