யாரும் வெற்றிலை போடுவதில்லை.. ஸ்வீட் பீடாவை தான் விரும்புகிறார்கள் - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு..

 
வெற்றிலை  - பீடா

இளைஞர்கள் ஸ்வீட் பீடா சாப்பிடுவதைத் தான் விரும்புவதாகவும், வெற்றிலை போடும் பழக்கம்  குறைந்துவிட்டதாகவும், சட்டப்பேரவையில்  வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

இன்று தமிழக சட்டப்பேரவையில்  கேள்வி நேரத்தின் போது, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசினார். அப்போது   தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கருப்பு வெள்ளை வெற்றிலையை விவசாயிகள் உற்பத்தி செய்வதாக குறிப்பிட்ட அவர்,  இந்த வெற்றிலை மருத்துவ குணங்களையும் கொண்டும், வீரியமிக்கதாகவும் இருப்பதால் மருத்துவ துறை பயன்படுத்தும் விதமாக வேற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Betel - வெற்றிலை

அவரைத்தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன், காட்டுமன்னார்கோவில்  லால்பேட்டையில் வெற்றிலை அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஆகையால்  இங்கு ஆராய்ச்சி மையத்துடன் கூடிய தோட்டகலைக் கல்லூரி அமைக்கவேண்டும் என்றும் கேட்டார்.   பின்னர் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.

ஸ்வீட் பீடா

 தமிழ்நாட்டில் அங்கங்கே  உற்பத்தி செய்யப்படும் வெற்றிலைகளுக்கு , வேளாண் கல்லூரிகள் மூலமாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதாகத்  தெரிவித்தார். மேலும், கடந்த காலங்களில் பெரியகுளம், லால்பேட்டை,  கும்பகோணம் வெற்றிலை  என எல்லாம்  சிறப்பு பெற்று இருந்து, அப்போதெல்லாம்  உணவு சாப்பிட்டாலே வெற்றிலை சாப்பிடுவார்கள்;  ஆனால் இன்றுள்ள இளைஞர்கள் வெற்றிலை போடுவதில்லை என்று கூறினார். அத்துடன்   ஸ்விட் பீடா சாப்பிடுவதையே விரும்புவதாக  தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அமைச்சர்,  வெற்றிலை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாவும், இதன் மூலம் 778 விவசாயிகள் பயனடைவதாவும்  குறிப்பிட்டார்.