நாராயணசாமிக்கு சீட் இல்லை- புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வீடு முற்றுகை

 
ச்

புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வீட்டை நாராயணசாமி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வெளிய வந்த வைத்திலிங்கம் காரை முற்றுகையிட்டு, செல்ல முடியாமல் தடுத்தனர்.‌ இதனால் போலீசார் வலு கட்டாயமாக அற்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும், தகுதியான தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஏ, பி பார்ம் வழங்கி மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தியது. அதேபோல மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பியும், தனது இல்லத்தில் காங்கிரஸ் சார்பில் விண்ணப்பங்களை வழங்கினார்.
முன்னாள் முதல்அமைச்சர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு கட்சியில் விண்ணப்பம் வழங்கவில்லை. இதையறிந்த நாராயணசாமி ஆதரவாளர்கள், வைத்திலிங்கம் எம்பி வீட்டின் முன்பு கூடினர். 

அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். வைத்திலிங்கத்துக்கு எதிராக அவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வெளியே வந்த வைத்திலிங்கத்தை முற்றுகையிட்டு அவர் காரை செல்லவிடாமல், கார் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை அற்புதப்படுத்தியதால் பதற்றம் நிலவியது. இதேபோல நெட்டப்பாக்கம் தொகுதிக்கு அன்பரசு என்பவருக்கு படிவம் கொடுத்தார். இதையறிந்த நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த காங்கிரசார், வைத்திலிங்கம் எம்பி வீட்டின் முன்பு குவிந்தனர். அங்கு முற்றுகையிட்டு அன்பரசுவுக்கு சீட் வழங்கக்கூடாது என்றும், அதே பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவருக்குதான் சீட் வழங்க வேண்டும் என அவரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தகவலறிந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். தேர்தல் விதிமுறைப்படி கூட்டம் கூடக் கூடாது எனக்கூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அடுத்தடுத்த போராட்டங்களால் வைத்திலிங்கம் எம்பி வீடு பரபரப்பாக காணப்பட்டது.