நோ ரீ-போலிங்! - தமிழகத்தில் தேர்தல் ஆவணங்கள் ஆய்வு நிறைவு..!
தமிழ்நாட்டில் எங்கும் மறுவாக்குப்பதிவு இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நாளில் பயன்படுத்தப்பட்ட Form 17A உள்ளிட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வுகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றன. இதில் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேர்தலில் போட்டியிட்ட 4,023 வேட்பாளர்களுக்கும் ஆய்வு நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் குறித்து முன் கூட்டியே தகவல் வழங்கப்பட்டிருந்தது.
ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், எந்தவொரு முறைகேடும் கண்டறியப்படாததால், எந்தத் தொகுதியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைக்கப்படவில்லை" என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை இரட்டை பூட்டு முறை, 24 மணி நேர பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு ஆகியவற்றுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தினமும் இருமுறை பார்வையிடவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தினசரி அல்லது 3–4 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் அந்த வளாகத்தில் முகாம் அமைத்து கண்காணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

