#BREAKING பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு சிபாரிசு கிடையாது - தமிழக அரசு சுற்றறிக்கை

 
government office leave

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறையை நிலைநாட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம்,கூடுதல் இயக்குநர் ராஜசேகர் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.

சில அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தங்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு போன்ற தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக, உரிய நிர்வாக வழியை (Proper Official Channel) பின்பற்றாமல், நேரடியாக அமைச்சர்கள், MLA-க்கள், முதலமைச்சரின் முகவரி பிரிவு (CM Cell) ஆகியோரிடம் மனு கொடுத்து வருகின்றனர். இது அரசு நிர்வாக மரபுக்கு எதிரானது. அரசுப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு நேரடியாக மனுக்களை அளிக்கக் கூடாது. அரசுப் பணியாளர்கள் தங்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் இதர தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக, உரிய நிர்வாக வழியைப் பின்பற்ற வேண்டும் என சுற்றறிக்கை வாயிலாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  அரசியல் செல்வாக்கையோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகள் மூலம் கொண்டுவரவோ அல்லது முயற்சிக்கவோ கூடாது, அந்தந்த துறை சார்ந்த தலைமை வழியாக உரிய விதிகளை பின்பற்றி மனு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதை மீறினால், தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் (TNCS D&A Rules) கீழ் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சிபாரிசு கலாச்சாரத்தை ஒழித்து, தகுதி அடிப்படையில் நிர்வாகத்தை நடத்த அரசு எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை, நேர்மையான அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.