அதிமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை- கடம்பூர் ராஜூ

அதிமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுதான் எங்கள் வரலாறு. கூட்டணி முடிவை பொதுச் செயலாளர்தான் எடுப்பார், அனைவரும் அவரது முடிவுக்கு ஒத்துழைப்போம் என அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, “அதிமுகவை ரெய்டு நடத்தி தான் கட்சி வர வைக்க வேண்டும் என அவசியம் இல்லை, எடப்பாடியிடம் பேசினாலே கூட்டணிக்கு வந்து விடுவார் என நயினார் நாகேந்திரன் கூறுகிறார். இது அவருடைய கட்சி நிலைப்பாடு. இனி தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு கட்சியும் யார், யாரிடம் கூட்டணி என முடிவு எடுக்க வேண்டும். இந்த விடியா திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இந்த ஈரோடு இடைத்தேர்தலில் அங்கு ஜனநாயக விதிமுறை மீறி நடக்கிறது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துள்ளனர்.
மக்களை ஆடு,மாடு போல் பட்டியில் அடைத்து வைத்து துன்புறுத்தி தேர்தலை நடத்துகின்றனர்,அதனால் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிந்தோம். இதே காரணத்தை கூறி தேமுதிகவும், பாஜகவும் புறக்கணித்துள்ளது. இந்த நிலையிலே மக்களும் இந்த தேர்தலை புறக்கணிப்பார்கள். இதே நிலையில் தான் வருகின்ற தேர்தலிலும் மக்கள் திமுகவை புறக்கணிப்பார்கள். திமுகவை எதிர்ப்பவர்கள் யார் யாருடன் கூட்டணி அமைய வேண்டும் என எல்லாரும் பேசுவார்கள் சேர்வார்கள். அதிமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுதான் எங்கள் வரலாறு. கூட்டணி முடிவை பொதுச் செயலாளர்தான் எடுப்பார், அனைவரும் அவரது முடிவுக்கு ஒத்துழைப்போம். திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சியின் குரலும் எங்கள் பக்கம் தான் ஒலிக்கும். கூட்டணி முடிவை எடப்பாடி பழனிச்சாமி தான் எடுப்பார், அதற்கு அனைவரும் ஒத்துழைப்போம்” என்றார்.