எங்கள் கூட்டணி ஆட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை!

 
1

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மக்களவை தேர்தல் பரப்புரையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறாததையெல்லாம் திரித்துக் கூறி, முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையை போல இருப்பதாக கூறி பிரதமர் மோடி பேசி வந்தார். ஆனால், முதல்கட்ட தேர்தலில் தமிழகத்தில் தொடங்கிய மோடி எதிர்ப்பு அலை 6 கட்டங்களாக இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் எதிரொலிக்க தொடங்கியதால் தேர்தல் கள நிலவரத்தை உளவுத்துறை மூலம் அறிந்த பிரதமர் மோடியின் பேச்சில் பதற்றமும், அச்சமும் தொடர்ந்து வெளிப்பட ஆரம்பித்தன.

ஆனால், 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத காரணத்தால் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தவறான ஜி.எஸ்.டி. அமலாக்கம், விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு நியாய விலை மறுப்பு, மாநில உரிமைகள் பறிப்பு என மக்கள் விரோத ஆட்சி நடத்தியதால் மக்களிடையே பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக அலை வீசிக் கொண்டிருக்கிறது. இந்த அலையினால் மோடி ஆட்சி வருகிற தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதியாகி இருக்கிறது.

மக்களிடையே நிலவிய மத நல்லிணக்கத்தை கடந்த 10 ஆண்டுகளாக சீர்குலைத்து வெறுப்பு அரசியலை வளர்த்து அதன்மூலம் பகைமையை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற்றது 2019 தேர்தலோடு முடிந்து போன கதையாகும். அந்த தேர்தலில் மக்களை மதரீதியாக ஏமாற்றியதைப் போல 2024 இல் ஏமாற்ற முடியாது. மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் மோடியின் ஆட்சியை அகற்றி பாடம் புகட்டுவதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்தியா கூட்டணி ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி அமைக்கப் போவது உறுதி. இதை மோடி உட்பட எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.