இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வர கூடாது - சாலை வசதி இல்லாததால் சடலத்தை படகில் கொண்டு சென்ற உறவினர்கள்..!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கோட்டைக்குப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பழவேற்காடு ஏரியை கடந்து செல்லும் நிலை உள்ளது.
கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் சுரேந்தர் (41), பிரேமா(45) ஆகிய இருவரும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தனர். இறுதி அஞ்சலிக்கு பிறகு இருவரது சடலங்களை மயானத்திற்கு எடுத்து செல்ல போதிய சாலை வசதி இல்லாததால், படகில் உடல்களை வைத்து மயானத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்தனர்.
பழவேற்காடு ஏரியை கடந்து செல்ல முறையான சாலை வசதி இல்லாததால், படகில் வைத்தே சடலத்தை எடுத்து செல்லும் அவல நிலை நீடிப்பதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏரியில் அதிகப்படியான சேறு, முட்புதர் உள்ளதால் சடலங்களை நீரில் எடுத்துச்செல்வது கடினமாக உள்ளதாகவும், எனவே சடலங்களை கொண்டு செல்ல உரிய முறையில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என கோட்டைக்குப்பம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் தமிழ்நாடு அரசும், அதிகாரிகளும் தங்களது கிராமத்திற்கு உரிய தீர்வை வழங்கவில்லை எனவும், உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

