இடைத்தேர்தலே தேவையில்லை..! 2வது இடம் பிடித்தவருக்கு எம்எல்ஏ பதவி வழங்க வேண்டும் - வேல்முருகன் யோசனை!

 
1

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கட்சித் தொண்டர் ஒருவரின் இல்லத் திருமண விழாவில் பேசியதாவது,

"தமிழகத்தில் விஜய் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்களை கடந்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. செஞ்சியில் காணாமல் போன சிறுமி இதுவரை கண்டுபிடிக்கப்படாதது வேதனையளிக்கிறது.

போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களும் தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. பெண் அரசு அதிகாரிக்கு சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் இதுவரை முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகளை முதலமைச்சர் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாக தமிழக அரசு செயல்படுகிறது.

தனது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினரின் செயல்பாடுகளால் விஜய் சம்பாதித்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு வருகிறது.

ஆறு மாத கால ஆட்சியில் பல சாதனைகளை புரிந்தோம் எனக் கூறுகிறார்கள். எனவே, அந்த சாதனைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். இல்லையெனில், நிர்வாகத்தை வழிநடத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் மதநல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் பாதுகாக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்தித்து தமிழகத்தின் உரிமையை முதலமைச்சர் விஜய் வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் தமிழர்கள் அல்லாதவர்கள் அதிகளவில் இருப்பது கவலை அளிக்கிறது.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைப் பிரச்சனைகளில் உரிய அக்கறை காட்டப்படவில்லை.

தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்வது, வேலைவாய்ப்பின்மை, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் சம்பளப் பிரச்சனை, ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தை வைகோ ஆதரித்த பிறகு அவரது பேச்சுகளும் செயல்பாடுகளும் தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். இருப்பினும், இடைத்தேர்தல் தேவையற்றது. வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்தாலோ அல்லது பதவியை இழந்தாலோ இரண்டாவது இடத்தைப் பிடித்த கட்சியின் வேட்பாளரை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும்" என வேல்முருகன் தெரிவித்தார்.