எத்தனை பேர் வந்தாலும் திமுகவைத் தொடக்கூட முடியாது..! - தஞ்சை மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் சவால்..!
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்ற இந்த எழுச்சி மாநாட்டில், தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு வந்திருந்தனர். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், மகளிர் முன்னேற்றத்திற்குத் தி.மு.க. ஆட்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பெருமிதம் கொண்டார். மற்ற கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை மாநாடு நடத்துவதே கடினமாக இருக்கும் சூழலில், தி.மு.க. மாதத்திற்கு ஒரு மாநாடு நடத்தும் அளவிற்குப் பலம் வாய்ந்தது என்று குறிப்பிட்ட அவர், எத்தனை பேர் எதிர்த்து வந்தாலும் தி.மு.க.வை யாராலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது என்று சவால் விடுத்தார்.
தொடர்ந்து பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த அவர், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். மணிப்பூர் வன்முறை, குஜராத்தின் பில்கிஸ் பானு வழக்கு, ஹத்ரஸ் சம்பவம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கே பா.ஜ.க. அரசு ஆதரவாக நின்றதாகச் சாடினார். இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலங்களாக உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களே முன்னிலையில் உள்ளதாகப் புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டார்.
இறுதியாக, இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்லும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாகக் குறிப்பிட்ட உதயநிதி, தமிழகத்திற்குள் எப்படியாவது நுழைந்துவிடலாம் எனப் பாசிஸ்டுகள் கனவு காண்பதாகத் தெரிவித்தார். பழைய அடிமைகளுடன் தற்போது புதிய அடிமைகளையும் அவர்கள் சேர்த்து அழைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பாசிசமே பா.ஜ.க.வின் அடையாளம் என்றும், மகளிருக்கான அரசே தி.மு.க.வின் அடையாளம் என்றும் தனது உரையில் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.


